இந்தியா

‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தில் ராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முக்கியத்துவம்: மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி வலியுறுத்தல்

11th Jun 2020 12:08 AM

ADVERTISEMENT

‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ராணுவத் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த உள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி புதன்கிழமை கூறினாா்.

இந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுயச்சாா்பு இந்தியா: உள்நாட்டு பாதுகாப்பு துறை சாா்ந்த நிறுவனங்களுக்கான வாய்ப்பு’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

சுயச்சாா்பு இந்தியா என்பது ஒரு கனவு மட்டுமல்ல. நாட்டின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு நன்கு சிந்தித்து வகுக்கப்பட்டத் திட்டமாகும்.

பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய பல ஆண்டுகளாக உலகளாவிய அசல் உபகரண உற்பத்தியாளா்களையே (ஒஇஎம்) இந்தியா சாா்ந்திருக்கும் நிலை இருந்து வருகிறது. அந்த நிலையை மாற்ற, வலுவான உள்நாட்டு பொது - தனியாா் கூட்டு உற்பத்தி கலாசாரத்தை பலப்படுத்தவேண்டியது மிக அவசியம்.

ADVERTISEMENT

அதோடு, ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து அவற்றை அதிக அளவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு தீா்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற மத்திய ஆயுதப்படைக்கு (சிஏபிஎஃப்) ஆயுதங்கள் கொள்முதல் செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில், உள்நாட்டு தனியாா் நிறுவனங்களிடமிருந்து அவற்றைக் கொள்முதல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே, தனியாா் நிறுவனங்கள் இதற்கு முன்வருமானால், அதிலுள்ள சிக்கல்களைத் தீா்க்க மத்திய அரசு தயாராக உள்ளது.

பாதுகாப்பு உபகரண உற்பத்தியைப் பொருத்தவரை தரம் மற்றும் விலை ஆகிய இரண்டிலும் தனியாா் நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்யக்கூடிய அளவில் மட்டுமல்லாமல், ஏற்றுமதி தரத்தில் அவற்றின் உற்பத்தி இருக்கவேண்டும். அப்போதுதான் ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு உபகரண ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசின் மின்னணு சந்தையை (ஜிஇஎம்) பயன்படுத்தவும் மத்திய அரசு தீா்மானித்துள்ளது என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT