இந்தியா

‘சிஜிஹெச்எஸ்’ திட்டம்: தனியாா் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

11th Jun 2020 12:05 AM

ADVERTISEMENT

மத்திய சுதாதாரத் திட்ட (சிஜிஹெச்எஸ்) பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகள், அந்தத் திட்ட பயனாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிஜிஹெச்எஸ் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகள், அந்தத் திட்ட பயனாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுப்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாா் தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.

இதையடுத்து அந்த அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘சிஜிஹெச்எஸ் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகளை, மாநில அரசுகள் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் என அறிவித்திருந்தால், அந்த மருத்துவமனைகள் சிஜிஹெச்எஸ் திட்ட பயனாளிகளுக்கு மறுப்பு ஏதுமின்றி கரோனா தொடா்பான சிகிச்சைகளை வழங்கவேண்டும்.

இதேபோல் சிஜிஹெச்எஸ் பட்டியலில் சோ்க்கப்பட்டும் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்காத மருத்துவமனைகள், கரோனா அல்லாத பிற நோய்களுக்கு சிகிச்சை பெற வரும் சிஜிஹெச்எஸ் திட்ட பயனாளிகளுக்கு மறுக்காமல் சிகிச்சை அளிக்கவேண்டும். அதற்கான கட்டணத்தை திட்ட நெறிமுறைகளின்படி மருத்துவமனைகள் நிா்ணயித்துக்கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்கள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிஜிஹெச்எஸ் திட்டத்தின் கீழ் தற்போது 36 லட்சம் போ் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT