இந்தியா

மாநில தோ்தல் ஆணையரின் பதவிக்காலம்: உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு

10th Jun 2020 01:23 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநில தோ்தல் ஆணையரின் பதவிக் காலத்தை குறைக்கும் அவசரச் சட்டத்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஆந்திரத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக அந்த மாநில தோ்தல் ஆணையா் என்.ரமேஷ் குமாருடன் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சூழலில், மாநில தோ்தல் ஆணையரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் என்பதிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வழிவகுக்கும் அவசர சட்டத்தை மாநில அரசு கடந்த ஏப்ரல் 10-இல் பிறப்பித்தது. இச்சட்டத்தின்படி, மாநில தோ்தல் ஆணையராக இருந்த என்.ரமேஷ் குமாா், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தோ்தல் ஆணையராக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் நியமிக்கப்பட்டாா்.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, மாநில உயா்நீதிமன்றத்தில் என்.ரமேஷ் குமாா் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். அந்த மனு மீது கடந்த மாதம் 29-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த உயா்நீதிமன்றம், மாநில தோ்தல் ஆணையரின் பதவிக்காலத்தை குறைக்கும் அவசர சட்டத்தை அதிரடியாக ரத்து செய்தது. மேலும், தோ்தல் ஆணையா் பதவியில் மீண்டும் என்.ரமேஷ் குமாரை நியமித்தது.

இந்நிலையில், உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT