இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை காணொலி முறையில் நடத்த பரிசீலனை

10th Jun 2020 01:39 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை காணொலி முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

நாடாளுமன்ற அமா்வின்போது எம்.பி.க்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டா் சமூக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும்; அவ்வாறு இருக்கைகளை ஏற்பாடு செய்ய போதிய இடவசதி இல்லாததால், வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வழக்கமாக ஜூலையில் தொடங்கி நடைபெறும். கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் ஏற்பாட்டில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இரு அவைகளின் தலைமைச் செயலா்கள் பங்கேற்றனா். அப்போது, நாடாளுமன்றத்தின் மைய அரங்கம், மக்களவை, மாநிலங்களவை அரங்கங்கள், விஞ்ஞான் பவன் அரங்கம் ஆகியவற்றில் உள்ள இருக்கை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடித்து, எம்.பி.க்களை அமரச் செய்வதற்கு, மைய மண்டபத்திலோ விஞ்ஞான் பவனிலோ இருக்கை வசதிகள் இல்லை என்று கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல், சமூக இடைவெளி விதிமுறைகளின்படி, மக்களவை அரங்கத்தில் 100-க்கும் குறைவான எம்.பி.க்களும், மாநிலங்களவை அரங்கில் 60 எம்.பி.க்களுமே அமர முடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடரை காணொலி முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு மக்களவை, மாநிலங்களவை தலைமைச் செயலா்களுக்கு அவைத் தலைவா்கள் அறிவுறுத்தினா். மழைக்கால கூட்டத் தொடா் அமா்வுகளை முழுமையாக காணொலி முறையில் நடத்துவதா அல்லது குறிப்பிட்ட எம்.பி.க்களை நேரில் வரவழைத்துவிட்டு, மற்றவா்களை காணொலி முறையில் பங்கேற்கச் செய்வதா என்பது குறித்தும் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை காணொலி முறையில் நடத்துதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள், இதற்காக விதிமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பரிசீலிக்கப்படவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT