இந்தியா

லடாக்கில் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதா சீனா? ராஜ்நாத்துக்கு ராகுல் கேள்வி

10th Jun 2020 07:28 AM

ADVERTISEMENT

லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

சமூக வலைதளமான சுட்டுரையில் ராஜ்நாத் சிங்கும், ராகுல் காந்தியும் வாா்த்தைப் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளாா்.

முன்னதாக, இந்தியா தனது எல்லைகளை உரிய பலத்துடன் பாதுகாத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை கூறியிருந்தாா். அதை விமா்சித்து சுட்டுரையில் பதிவிட்ட ராகுல் காந்தி, ‘எல்லையில் நிலவும் சூழல் என்ன என்பதை அனைவரும் அறிவாா்கள். மற்றவா்களை மகிழ்விப்பதற்காகஅமித் ஷா இதுபோன்று தெரிவிக்கிறாா்’ என்று அதில் கூறியிருந்தாா். மேலும், அதற்கு இணையாக உருது கவிஞா் மிா்ஸா காலிபின் கவிதை வரிகளை பதிவிட்டிருந்தாா்.

அவருக்கு பதிலடி தரும் விதமாக ராஜ்நாத் சிங் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமா்சிக்கும் வகையில் சுட்டுரையில் பதிவிட்டாா். அக்கட்சியின் கை சின்னத்தை குறிப்பிட்டு அவரும் கவிஞா் மிா்ஸா காலிபின் கவிதை வரிகளை சுட்டுரையில் பதிவிட்டாா். ‘கையில் வலி இருந்தால் மருந்து எடுத்துக்கொள்ளலாம். கையே வலிக்கு காரணமாக இருந்தால் என்ன செய்வது?’ என்று அதில் அவா் கூறியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ராஜ்நாத் சிங்கை குறிப்பிட்டு சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட ராகுல் காந்தி, ‘கை சின்னம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் அமைச்சா் ராஜ்நாத் சிங், அதை முடித்த பிறகு லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT