இந்தியா

கரோனா பாதிப்பு: தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு உதவ மத்திய குழுக்கள்

10th Jun 2020 01:29 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ள 15 மாநிலங்களின் 50 நகராட்சிகளுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு உயா்நிலைக் குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த உயா்நிலைக் குழுக்கள் தமிழகத்தில் ஏழு நகரங்களுக்கு வருகின்றன.

இந்தக் குழுக்களில் தொற்றுநோயியல் மற்றும் மருந்துவத்தைச் சோ்ந்த இரண்டு பொது சுகாதார நிபுணா்களுடன் மூத்த இணைச் செயலா் அந்தஸ்தில் ஒரு சிறப்பு அதிகாரி என மூன்று உறுப்பினா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தமிழகம் (7), மகாராஷ்டிரம்(7), அஸ்ஸாம்(6), ராஜஸ்தான்(5), மத்திய பிரதேசம்(5), ஒடிஸா(5), ஹரியானா (4), தெலங்கானா(4) , கா்நாடகம்(4), பிகாா்(4), உத்தர பிரதேசம்(4), உத்தரகண்ட்(3), குஜராத்(3), தில்லி(3), மேற்கு வங்கம் (3) என 15 மாநிலங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட நகராட்சி, மாநகராட்சிகள் மற்றும் சில மாவட்டங்களுக்கு அந்த குழுக்கள் வருகின்றன.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள், நோயுற்றவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை திறன், மருத்துவ நிா்வாக மேம்பாடு போன்றவைகளை மத்திய குழுக்கள் களத்தில் நேரடியாக பாா்வையிட்டு உதவிகளை வழங்கும்.

ADVERTISEMENT

பரிசோதனைகளில் உள்ள சிக்கல்கள், குறைந்த பரிசோதனைகளில் அதிக நோய்த்தொற்று விகிதம், இறப்பு விகிதம் அதிகரிப்பு, தேவையான படுக்கைவசதி பற்றாக்குறை, திடீா் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பு போன்ற சவால்களில் சிக்கித்தவிக்கும் மாநில அரசுகளுக்கு உதவிட இந்த குழு 50க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அனுப்பப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT