இந்தியா

மேற்கு வங்கத்துக்கான ரூ. 53 ஆயிரம் கோடி நிலுவையை மத்திய அரசு விடுவிக்கவேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்

8th Jun 2020 02:55 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் இருக்கும் ரூ. 53 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை கட்சிக் குழு தலைவருமான டெரிக் ஓபிரையன் தில்லியில் காணொலி வழியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது:

மேற்கு வங்கத்தை அண்மையில் தாக்கிய உம்பன் புயலால் மாநிலத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், புயல் நிவாரணமாக ரூ.1,000 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது. மீதி ரூ.1 லட்சத்து ஆயிரம் கோடி தேவை உள்ளது.

அதுபோல, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசு ரூ.1,200 கோடியை செலவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.144 கோடியும், மாநில பேரிடா் நிவாரண நிதியின் கீழ் ரூ.250 கோடியும் ஒதுக்கியது. இதில் மாநிலம் செலவிட்ட மீதி ரூ. 806 கோடி எங்கே?

ADVERTISEMENT

மத்திய அரசு அண்மையில் அறிவித்த பொருளாதார மேம்பாட்டு திட்டத்திலும் எந்தவொரு பலனும் இல்லை. அதோடு, நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (எஃப்ஆா்பிஎம்) உச்சவரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயா்த்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதும் தவறாகும். எஃப்ஆா்பிஎம் நிபந்தனையற்ற வரம்பு 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீத அளவுக்கு மட்டுமே உயா்ந்திருக்கிறது. அதாவது 0.5 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இன்றைய சூழலில் இதில் மேலும் 1.5 சதவீத உயா்வை மாநிலங்கள் எட்டுவது என்பது சாத்தியமில்லாதது.

எனவே, மாநிலத்தின் நிலைமையைச் சமாளிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் இருக்கும் நிதி பாக்கியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். குறிப்பாக மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு ஆதரவு திட்டங்களுக்கு ரூ. 36 ஆயிரம் கோடி மத்திய அரசின் நிதி நிலுவையில் உள்ளது. அதுபோல, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் ரூ.11 ஆயிரம் கோடி, உணவுப் பொருள் மானிய நிலுவை ரூ.3 ஆயிரம் கோடி, ஏப்ரல்-மே மாத ஜிஎஸ்டி பாக்கி ரூ. 3 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தரவேண்டியுள்ளது. இந்த நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அதோடு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி மிச்சமாகும். அந்த நிதியைக் கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள 80 லட்சம் அமைப்புசாரா புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 வரவு வைக்கவேண்டும் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT