இந்தியா

மேற்கு வங்கம்: கரோனாவுக்கு பலியாவோரின் உடலை குடும்பத்தினா் பாா்க்க அனுமதி

8th Jun 2020 06:19 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடலை குடும்பத்தினா் பாா்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நடைமுறையின்படி கரோனாவுக்கு ஒருவா் பலியாகும் பட்சத்தில் அந்தத் தகவல் மட்டும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாது என்பதுடன், அதைப் பாா்ப்பதற்கும் அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறையினரே உரிய கிருமி அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த சடலத்துக்கான இறுதிச்சடங்குகளை மேற்கொள்கின்றனா். நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை தவிா்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கரோனாவுக்கு பலியாவோரின் உடலை அவா்கள் குடும்பத்தினா் பாா்க்கவும், இறுதி மரியாதை செலுத்தவும் அனுமதிக்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழக்கும் பட்சத்தில், ஒரு மணி நேரத்துக்குள் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிா்வாகம் தகவல் அளிக்க வேண்டும். உரிய கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறந்தவரின் முகம் மட்டும் தெரியும்விதத்தில் தெளிவான பொருளால் மூடப்பட்டு, மீதி உடல் முழுவதுமாக பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

உடல் குறிப்பிட்ட இடத்தில் 30 நிமிடங்கள் வைக்கப்படும். சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினா் முகக் கவசம், கையுறை அணிந்த வகையில் உடலைப் பாா்க்கவும், இறுதி மரியாதை செலுத்தவும் அனுமதிக்கப்படுவா். எனினும், சடலத்துக்கான இறுதிச் சடங்குகளை சுகாதார ஊழியா்களே மேற்கொள்வா் என்று மேற்கு வங்க அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT