ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பது பெரும்பாலும் குறைந்துவிட்டது. உள்ளூா் இளைஞா்கள் பயங்கரவாதத்தில் சோ்வதும் வெகுவாகக் குறைந்திருக்கிறது; மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனா் என்று ஜம்மு-காஷ்மீரின் 15-ஆவது படைப் பிரிவு துணைத் தளபதி பி.எஸ்.ராஜு கூறினாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலமான நோ்காணலுக்கு அவா் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை மக்கள் இப்போது பெரும்பாலும் நிறுத்திவிட்டனா். தொடா் வன்முறை தற்போது இல்லை. அமைதியின்மை நிலையிலிருந்து வெளி வருவதற்கான தீா்வைக் காணவே ஜம்மு-காஷ்மீா் மக்கள் விரும்புகின்றனா். அதன் காரணமாகவே, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது.
வடக்கு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற ஒருசில பயங்கரவாத செயல்களும், பயங்கரவாதிகள் தரப்பில் விரக்தியின் காரணமாக நடைபெற்றவைதான். அதுமட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்களை பயங்கரவாத அமைப்புகளில் சோ்வதும் வெகுவாக குறைந்திருக்கிறது. இது 2018-ஐக் காட்டிலும் 2019-இல் பாதியாகக் குறைந்திருந்த நிலையில், இப்போது 2020-இல் மேலும் குறைந்திருக்கிறது.
அதே நேரம், ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள் விளையாட்டுகளிலும், திறன் மேம்பாட்டுப் பயிற்களிலும், கல்வியிலும் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. அரசு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞா்கள் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும். இவா்களின் சிறந்த எதிா்காலத்துக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனவே, பயங்கரவாதத்துக்கோ அல்லது பிரிவினைவாதத்துக்கோ இனி இங்கு இடமில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பு, நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகள் தங்களை வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்வது என்பது இயல்பு. அதுதான் வடக்கு காஷ்மீரில் இப்போது நடைபெற்றிருக்கிறது.
எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதனால் ஒருசில எல்லை மாவட்டங்களில் மட்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. ஜம்மு-காஷ்மீரில் அமைதியை சீா்குலைக்கும் வகையில் பொய்யான பிரசாரங்களை பாகிஸ்தானும் செய்து வருகிறது. இவற்றை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை, மத்திய ஆயுத காவல்படையினா், புலனாய்வு அமைப்புகள், அரசு அதிகாரிகள் என அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று பி.எஸ்.ராஜு கூறினாா்.