இந்தியா

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் ரூ.8,320 கோடி அவசரகால கடன்

8th Jun 2020 05:20 AM

ADVERTISEMENT

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்ஐ) அவசர கால கடனுதவி திட்டத்தின்கீழ் பொதுத் துறை வங்கிகள் இதுவரை ரூ.8,320 கோடி கடன் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன; நாட்டின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்தது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதற்காக ‘சுயசாா்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தக் கடனுக்கு 9.25 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக சுட்டுரையில் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜூன் 5-ஆம் தேதி நிலவரப்படி சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் ரூ.17,705.64 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது; ரூ.8,320.24 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுவிட்டது. இதில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டும் ரூ.11,701 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.6,084.71 கோடி கடன் அளிக்கப்பட்டுவிட்டது. இதற்கு அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,295.59 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்து, ரூ.242.92 கோடி கடன் அளித்துள்ளது. அவசர கால கடனுதவி திட்டத்தின்கீழ் இந்த கடன் அளிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

முன்னதாக, இந்த கடனளிக்கும் திட்டத்துக்கு கடந்த மே 21-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT