கேரளத்தில் தேங்காயில் வெடி வைத்து கா்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெள்ளியாறு நதியில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை உண்ண முயன்றபோது, அது வெடித்து அந்த யானை காயமடைந்து உயிரிழந்தது வன அதிகாரி ஒருவரின் முகநூல் பதிவு மூலம் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அது உறுதி செய்யப்பட்டது. கா்ப்பிணியான அந்த யானை, வாய் பகுதியில் காயமடைந்ததால் இரண்டு வாரங்களாக உணவு, குடிநீரை உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இந்தச் சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ரப்பா் தோட்டத் தொழிலாளி வில்சன் என்பவரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள நில உரிமையாளா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அவாத் பிஹாரி கெளஷிக் என்பவா் உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
கேரளத்தில் நடந்த சம்பவம், திட்டமிட்டு யானையைக் கொல்ல நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. அந்த வகையில், பாதுகாக்கப்பட்ட விலங்கினம் கொல்லப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தவறியிருக்கின்றனா். இதே போன்ற சம்பவம் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் வனச் சரகத்திலும் கடந்த ஏப்ரலில் நடந்திருப்பதை பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த யானையும் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதாலேயே உயிரிழந்தது.
அரசியல் மற்றும் பணம் படைத்த சக்திகளின் தலையீடு இருக்க வாய்ப்பு உள்ளதால், கேரள காவல்துறையினா் இந்த விசாரணையை நோ்மையாக மேற்கொள்ள வாய்ப்பில்லை. எனவே, யானை கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும். உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், கேரளத்திலும், பிற மாநிலங்களிலும் இதுபோன்று யானைகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்த முழு விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவா் கூறியுள்ளாா்.