புது தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக இரண்டுவார காலம் அல்லது 14 நாள்கள் ஆகிறது என்பதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இன்னும் இரண்டு வாரத்தில் தில்லியில் கரோனா பாதிப்பு 56 ஆயிரமாக உயரலாம் என்று தில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நிலவரப்படி 1,282 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 28,000 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 812 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யேந்தர் ஜெயின், தில்லி அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 14 - 15 நாள்களாக உள்ளது. தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு 28,936 ஆக உள்ளது. அப்படி என்றால், இன்னும் இரண்டு வாரத்தில் கரோனா பாதிப்பு 56 ஆயிரமாக உயரும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.