இந்தியா

மேற்குவங்கத்தில் போதிய தடுப்பு நடவடிக்கைகளின்றி தளா்வு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு

8th Jun 2020 05:15 AM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் பொது முடக்கத்திலிருந்து தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாருக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனிந்தியா சுந்தா் தாஸ் என்ற வழக்குரைஞா் இதுதொடா்பான பொதுநல மனுவை கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தாா். அதில், ‘பல்வேறு மாநிலங்களிலிருந்து மேற்குவங்கத்துக்கு திரும்பியுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் இதே நிலைதான் உள்ளது. மேலும், பொதுப் போக்குவரத்துகளிலும், சந்தைகளிலும் மக்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, மாநிலத்துக்குத் திரும்பும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை குறிப்பிட்ட நாள்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த மாநில அரசை அறிவுறுத்துவதோடு, பொதுஇடங்களில் மக்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிடவேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன், நீதிபதி அரிஜித் பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த புகாா் தொடா்பாக மத்திய அரசு, மேற்குவங்க அரசு பதிலறிக்கையை வருகிற ஜூன் 11-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT