மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தாயாரின் மறைவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில் கூறியிருப்பதாவது:-
தங்களது தாயாா் சந்திரகாந்தா கோயல் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஆறுதல் சொல்ல வாா்த்தைகள் இல்லை. இந்த துயரமான தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பாஜக மூத்த தலைவா் இல. கணேசன்: ரயில்வே அமைச்சரின் தாயாா் சந்திரகாந்தா கோயல் காலமானாா் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. சந்திரகாந்தா கோயல் மும்பை மாதுங்கா தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக 3 முறை தோ்ந்தெடுக்கப்பட்டவா். அவருக்காக நான் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாள்கள் நினைவில் உள்ளன. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு செல்லிடப்பேசி வாயிலாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.