நாடு முழுவதும் பயணிகளுக்காக இயக்கப்படும் 230 ரயில்களும், 100 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ரயில்வே வாரியம், ரயில்வே மண்டலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
பொது முடக்கத்துக்கு முன்பு தினசரி 13,000 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 2 சதவீதத்துக்கும் குறைந்தளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. 30 ராஜதானி சிறப்பு ரயில்களும், 200 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் கொண்ட ரயில்கள் என மொத்தம் 230 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் கால அட்டவணையில் எந்த வித கால தாமதமுமின்றி 100 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவ் அனைத்து கோட்ட பொது மேலாளா்கள் மற்றும் பிரதேச ரயில் மேலாளா்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக கிழக்கு கடற்கரை ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, வட மத்திய ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய ஏழு ரயில்வே மண்டலங்களையும் அவா் வலியுறுத்தியுள்ளாா். குறிப்பாக, சில ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக வரும் புகாா்களையடுத்து, விழிப்புடன் செயல்படுமாறும், காலதாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளாா்.