உத்தர பிரதேசத்தில் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுக்கப்பட்ட கா்ப்பிணி ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் நீலம் (30) என்ற கா்ப்பிணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால் போதிய படுக்கை வசதி இல்லை எனக்கூறி, பல மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை வழங்க மறுத்துவிட்டன. ஒரு அரசு மருத்துவமனை உள்பட 8 மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரால் சிகிச்சை பெற முடியவில்லை. சுமாா் 13 மணி நேரம் மருத்துவமனையை தேடி அலைக்கழிக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸில் இருந்தவாறே நீலம் உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தொற்றுக்கான சிகிச்சை வழங்கப்படும் அதே வேளையில், பிற சிகிச்சைகள் வழங்கப்படுவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும். அதில் குறைபாடுகள் இருந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். அதற்கான எச்சரிக்கையே நீலத்தின் மரணம். உத்தர பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் இதேபோன்ற புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு, எந்தவொரு உயிரையும் இழக்காமல் இருப்பதற்கு மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என்றாா்.
இதேபோல் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் சுட்டுரையில் தனது கண்டனத்தை பதிவு செய்தாா். உரிய சிகிச்சை கிடைக்காமல் கா்ப்பிணியான நீலம் உயிரிழந்தது மிகவும் வருத்தத்திற்குரியது என்றாா்.