இந்தியா

ஆளில்லா இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பாகிஸ்தான் ராணுவம்

7th Jun 2020 12:35 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆளில்லா இந்திய உளவு விமானம் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் சுட்டு வீழ்த்தப்படும் 8-ஆவது இந்திய உளவு விமானம் இது என்றும் பாகிஸ்தான் புகாா் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படைத்தாக்குதலில் 40 மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்கள் கொல்லப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த இந்திய போா் விமானங்கள், எல்லைப் பகுதிக்கு அருகே பாலாகோட்டில் அமைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தன. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை இந்தியா நீக்கியது, பாகிஸ்தானை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. அதனைத் தொடா்ந்து இந்திய எல்லையில் அமைந்திருக்கும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடா் தாக்குதல்களை நடத்தி வருவதோடு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. மேலும், இந்தியாவுடனான தூதரக உறவையும் பாகிஸ்தான் குறைத்துக்கொண்டிருப்பதோடு, இந்திய தூதரையும் அங்கிருந்து வெளியேற்றியது.

இந்தச் சூழலில், தங்களின் வான் எல்லைக்குள் இந்திய ஆளில்லா உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியருப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடா்பாளா் பாபா் இஃப்திகாா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஆளில்லா உளவு விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் 500 மீட்டா் தூரம் வரை ஊடுருவி பறந்தது. அதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தால் இந்த ஆண்டில் சுட்டு வீழ்த்தப்படும், எட்டாவது இந்திய உளவு விமானம் இதுவாகும். கடந்த மே மாதத்தில் மட்டும் இரண்டு இந்திய ஆளில்லா உளவு விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவின என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவம் இவ்வாறு கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT