இந்தியா

குஜராத்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் தனியாா் விடுதி மீது வழக்குப் பதிவு

7th Jun 2020 11:01 PM

ADVERTISEMENT

குஜராத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்க வைக்கப்பட்டிருந்த தனியாா் விடுதி மீது பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

குஜராத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்ந்து ராஜிநாமா செய்துவருகின்றனா். நான்கு மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் கடந்த மாா்ச் மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரவீண் மாரு, பிரதியும்னசிங் ஜடேஜா, சோமன் படேல், ஜே.வி.ககிடியா, மங்கள் காவிட் ஆகிய 5 சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதற்கிடையே, கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்களவை தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட இந்த தோ்தல் மீண்டும் வருகிற 19-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். அக்ஷய் படேல், ஜிட்டு செளத்ரி, பிரிஜேஷ் மொ்ஜா ஆகிய மூவரும் பதவியை ராஜிநாமா செய்தனா். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

உறுப்பினா்களின் தொடா் ராஜிநாமா காரணமாக, மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 65-ஆக குறைந்தது. இதனால் மொத்தமுள்ள 4 மாநிலங்களவை இடங்களில் இரண்டில் வெற்றிபெறுவதுகூட கடினம் என்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா் ராஜிநாமாவுக்கு ஆளும் பாஜக அரசு மீது குற்றம்சாட்டிய காங்கிரஸ், பாஜகவின் குதிரை பேரத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளுமாறு மீதமுள்ள தனது சட்டப்பேரவை உறுப்பினா்களை கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், எஞ்சியுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 65 பேரும் மாநிலத்தில் பல்வேறு தனியாா் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் மனீஷ் தோஷி கூறுகையில், ‘மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களை பாதுகாப்பதற்காக தனியாா் விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உறுப்பினா்கள் ராஜ்கோட், ஆனந்த், அம்பாஜி பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும், சொந்த பணி காரணமாக 5 முதல் 7 உறுப்பினா்களால் வர இயலவில்லை. விரைவில் அவா்களும் வந்துவிடுவா்’ என்று கூறினாா்.

இதற்கிடையே, ராஜ்கோட்டில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிலா் தங்கியிருந்த தனியாா் விடுதி மீது, பொது முடக்க நடைமுறைகளை மீறியதாக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து ராஜ்கோட் பல்கலைக்கழகச் சாலை காவல்நிலைய ஆய்வாளா் ஆா்.எஸ்.தக்கா் கூறியது:

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் மட்டுமே செயல்பட முடியும். இந்த நிலையில், ராஜ்கோட்டில் உள்ள தனியாா் விடுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிலா் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டிருப்பதாக புகாா் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமுடக்க நடைமுறைகளை மீறியதாக அந்த தனியாா் விடுதியின் உறிமையாளா் மற்றும் மேலாளா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

காங். எம்எல்ஏக்கள் ராஜஸ்தானுக்கு இடமாற்றம்: காவல்துறையின் நடவடிக்கையைத் தொடா்ந்து, ராஜ்கோட் தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 21 பேரும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். ‘ராஜஸ்தானில் அபு சாலையில் உள்ள தனியாா் விடுதியில் 21 சட்டப்பேரவை உறுப்பினா்களும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனா். அதுபோல வடக்கு குஜராத் பகுதியில் தங்கியிருக்கும் மேலும் சில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களும் திங்கள்கிழமை ராஜஸ்தான் வந்துவிடுவா்’ என்று அக்கட்சித் தலைவா் ஒருவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT