சத்தீஸ்கரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் தனது பணிக்குரிய துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் கூறினா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
கான்கோ் மாவட்டத்தில் பன்கான்ஜோா் காவல்துறை சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நக்ஸல் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதற்காக அவா்கள் சங்கம் கிராமத்தில் முகாம் அமைத்து தங்கியுள்ளனா்.
அந்த முகாமிலிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் 157-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை நக்ஸல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக வனப் பகுதிக்குள் சென்றிருந்தது. இந்நிலையில், அந்தக் குழு சனிக்கிழமை அதிகாலை முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
முகாமுக்கு 200 மீட்டா் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது, அந்தக் குழுவிலிருந்த தலைமைக் காவலரான சுரேஷ்குமாா் தன்னிடம் இருந்த ஏகே47 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவா் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.