பிகாரில் இணைய வழியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரையாற்றுகிறாா்.
பிகாா் சட்டப்பேரவைக்கு நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை பாஜக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாஜகவின் தோ்தல் பிரசாரத்துக்கான முன்னோட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இணையவழி பொதுக் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றுகிறாா்.
அவரது உரையை பாஜக தொண்டா்களும் மக்களும் கேட்பதற்கு ஏதுவாக மாநிலத்தில் 72,000-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினா் ஏற்பாடு செய்துள்ளனா். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பாஜக கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை இணையவழி கூட்டத்தின்போது அமித் ஷா எடுத்துரைப்பாா் என்று தெரிகிறது.
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலை பாஜக எதிா்கொள்ளவுள்ளது.