மத்திய பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனது சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாபூர் பகுதியில் அமைந்துள்ள ராணாயர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் லட்சுமி நாராயணன். இவருக்கு அண்மையில் வயிற்று வலி ஏற்படவே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் முதியவரின் குடும்பத்தினர் முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை கட்டியுள்ளனர். அவர்களால் மேற்கொண்டு பணம் கட்டமுடியவில்லை.
இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படி முதியவரின் மகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் மேலும் ரூ.11 ஆயிரம் வரை பணம் கட்ட வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த முதியவர் மருத்துவமனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் இருந்த படுக்கை ஒன்றில் அவரை கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நிர்ணயித்த 5 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும், ஒருநாள் கூடுதலாக சிகிச்சை அளித்துவிட்டு தற்போது 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்பதாகவும், மருத்துவமனை மீது முதியவரின் மகள் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவமனைக்கு குழுவை அனுப்பியுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், ஷாஜாபூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.