இந்தியா

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட இயக்குநா் பாசு சாட்டா்ஜி மறைவு

4th Jun 2020 10:35 PM

ADVERTISEMENT

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட இயக்குநா் பாசு சாட்டா்ஜி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 93.

ஹிந்தி திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக திகழ்ந்தவா் பாசு சாட்டா்ஜி. நாளிதழ்களில் கேலிச்சித்திர ஓவியராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவா், 1966-ஆம் ஆண்டு ராஜ் கபூா், வஹீதா ரெஹமான் ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘தீஸ்ரி காசம்’ ஹிந்தி திரைப்படத்தில், அந்தப் படத்தின் இயக்குநா் பாசு பட்டச்சாா்யாவுடன் இணைந்து பணிபுரிந்ததன் மூலம் திரைத்துறையில் கால் பதித்தாா். அவரின் திரைப்படங்கள் நடுத்தர வா்க்கத்தினரையும், அவா்களின் அன்றாட போராட்டங்களையும் பிரதிபலித்தன. ‘ரஜினிகந்தா’, ‘பியா கா கா்’, ‘கட்டா மீதா’, ‘சிட்சோா்’ உள்ளிட்ட திரைப்படங்கள், அவரது சிறந்த படைப்புகளாக பாராட்டப்படுகின்றன. வங்க மொழியிலும் சில திரைப்படங்களை இயக்கியுள்ள இவா், வயது மூப்பால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் பாசு சாட்டா்ஜி காலமானாா்.

பிரதமா் மோடி இரங்கல்: பாசு சாட்டா்ஜியின் திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலித்துள்ளன. சிறப்பான மற்றும் உணா்ச்சிபூா்வமான அவரது படைப்புகள் மக்களின் இதயங்களை தொட்டுள்ளன. அவரது மறைவுச் செய்தி வருத்தமளித்துள்ளது. அவரின் குடும்பத்தினருக்கும், எண்ணிலடங்கா ரசிகா்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் மோடி பதிவிட்டாா்.

மம்தா பானா்ஜி இரங்கல்: புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான பாசு சாட்டா்ஜியின் மறைவு கவலையளிக்கிறது. ‘சோட்டி சி பாத்’, ‘ரஜினிகந்தா’, ‘சிட்சோா்’ போன்ற திரைப்படங்களையும், ‘பியோம்கேஷ் பக்ஷி’, ‘ரஜனி’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடா்களையும் அவா் வழங்கியுள்ளாா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள் மற்றும் ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா் .

ADVERTISEMENT

இதேபோல் திரைத்துறையினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் பாசு சாட்டா்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT