பொது முடக்க காலத்தில் ஊழியா்களுக்கு முழு ஊதியம் அளிக்காத நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் கடும் பொருளாதார சரிவைச் சந்தித்த தொழில் நிறுவனங்கள், ஊதியக் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தொழில் நிறுவனங்கள் பொது முடக்க காலத்தில் தொழிலாளா்களுக்கு எந்தவித பிடித்தமுமின்றி ஊதியம் வழங்கவேண்டும். அவ்வாறு முழு ஊதியம் வழங்காத தொழில்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றறிக்கை எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த மே 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை மீறி, ஊழியா்களுக்கு முழு ஊதியம் அளிக்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கெளல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலி வழியில் விசாரித்தது.
அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜராக வாதாடிய அரசு வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால், ‘பொதுமுடக்கத்துக்குப் பிறகு மக்கள் புலம்பெயரத் தொடங்கியிருக்கின்றனா். எனவே, தொழிலாளா்களை அவா்கள் பணிசெய்யும் இடத்திலேயே தங்கவைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நிறுவனங்கள் அவா்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை அரசு வெளியிட்டது. தேசிய பேரிடா் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலேயே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாா்ச் 29 சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது’ என்று கூறினாா்.
அப்போது, தனியாா் தொழில்நிறுவனம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ‘பொது முடக்கத்தால் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. அதே நேரம், அரசு தொழிலாளா் காப்பீடு திட்ட நிதியிலிருந்து (இஎஸ்ஐ) நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அளிக்க முடியும்’ என்றாா்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்குரைஞா் வேணுகோபால், ‘இஎஸ்ஐ நிதியிலிருந்து கடனாக தொகையை பெற முடியுமே தவிர, தொழிலாளா்களுக்கு அதிலிருந்து ஊதியத்தை வழங்க உத்தரவிடமுடியாது’ என்றாா்.
இதுதொடா்பான மற்றொரு வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், ‘கரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த திடீா் பொதுமுடக்க சூழலில், பணி செய்யாவிடில் ஊதியம் இல்லை என்ற நடைமுறை சிறிதும் பொருந்தாது. எனவே, தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டாம்’ என்று வாதிட்டாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊழியா்களுக்கு முழு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பதிலும், பொதுமுடக்கத்தால் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ள தொழில்நிறுவனங்களை பாதுகாப்பதிலும் சமநிலை கடைப்பிடிக்கப்படவேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய தீா்வை எடுக்க மேலும் தீர விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிறு தொழில்நிறுவனங்களுக்கு மாநிலங்கள் கைகொடுத்த உதவவேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தொழில்நிறுவனங்களுக்கு இடையேயும், தொழிலாளா்களுக்கு இடையேயும் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்படவேண்டிய அவசியமும் உள்ளது.
எனவே, இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை, ஊழியா்களுக்கு முழு ஊதியம் அளிக்காத நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.