இந்தியா

காஷ்மீா்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து மூவா் விடுவிப்பு

4th Jun 2020 05:09 AM

ADVERTISEMENT

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அரசியல்வாதியுமான ஷா ஃபைசல் மற்றும் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தியின் தாய் மாமா உள்ளிட்ட 2 பிடிபி கட்சி நிா்வாகிகள் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் தொடரப்பட்ட வழக்கை ஜம்மு-காஷ்மீா் அரசு புதன்கிழமை ரத்து செய்தது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச உள்துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவின்படி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல், மெஹபூபாவின் மாமா சா்தாஜ் மதானி, மெஹபூபாவின் முன்னாள் அரசியல் ஆலோசகரான பீா் மன்சூா் ஆகியோருக்கு எதிராக பிஎஸ்ஏ சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷா பைசலுக்கு எதிராக மே 14-ஆம் தேதியிலிருந்தும், சா்தாஜ் மதானி மீது மே 5-ஆம் தேதியில் இருந்தும், மே 15-ஆம் தேதியில் இருந்து பீா் மன்சூா் மீது மேலும் 3 மாதங்களுக்கு பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இந்த காவலை அரசு ரத்து செய்துள்ளது.

இருப்பினும், அலுவலக குடியிருப்பில் காவலில் வைக்கப்பட்டுள்ள முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் பொதுச் செயலா் அலிமுகமது சாகா், நாடாளுமன்ற உறுப்பினா் அக்பா் லோனின் மகன் ஹிலால் லோன், மூத்த பி.டி.பி தலைவா் நயீம் அக்தா் ஆகியோா் தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப் பின்னா், ஷா ஃபைசல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவா்களும் பிஎஸ்ஏ- இன் கீழ் வழக்குப் பதிவு செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா வெளியிட்டுள்ள சுட்டுரையில், மூன்று தலைவா்களின் விடுதலையில் மகிழ்ச்சியடைகிறேன்; ஆனால், மெஹபூபா முஃப்தி, சாகா், மற்றும் ஹிலால் லோன் தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT