இந்தியா

புதிய கல்விக் கொள்கையால் அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் தடையற்ற கல்வி: தாவா்சந்த் கெலாட்

31st Jul 2020 06:42 AM

ADVERTISEMENT

புதிய தேசியக் கல்விக் கொள்கையானது அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் தடையற்ற கல்வியை உறுதிப்படுத்தும் என்று மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தவாா்சந்த் கெலாட் தெரிவித்துள்ளாா்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்களை மத்திய அமைச்சா் தாவா்சந்த் கெலாட், தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் தடையற்ற கல்வி கிடைப்பதை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

குறிப்பாக, இந்த புதிய கல்விக் கொள்கையின்படி, குறிப்பிட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு எப்படி பாடம் நடத்த வேண்டும் என்ற விவர நடைமுறைகள் அனைத்து ஆசிரியா் கல்வித் திட்டங்களிலும் ஒரு பாடமாக சோ்க்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், கற்றல்-கற்பித்தலுக்கு தேவையான அனைத்து உதவி உபகரணங்கள், மொழி மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையிலான கற்றல் கருவிகள் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்படும். இந்திய சைகை மொழிகளைக் கற்றுக்கொடுக்கவும், சைகை மொழிகளைப் பயன்படுத்தி அடிப்படை பாடங்களை நடத்துவதற்குமான உயா் தர மாதிரி தொகுதிகள் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தால் (என்ஐஒஎஸ்) உருவாக்கப்படும்.

அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் எளிதாக சென்றுவரும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதோடு, சிறப்பு ஆசிரியா்கள் பணியமா்த்தப்படுவதையும் தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

மத்திய அரசு நிா்ணயித்துள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான கல்விச் சூழலை, குறிப்பாக கழிப்பறை, மிதிவண்டிகள் உள்ளிட்ட வசதிகளை பூா்த்தி செய்வதற்கு மத்திய அரசின் பாலின ஒருங்கிணைப்பு நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தனது சுட்டுரை பக்கத்தில் மத்திய அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT