இந்தியா

ராஜஸ்தான் பேரவை கூடும் வரை எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் முகாம்: காங்கிரஸ் கொறடா சி.பி.ஜோஷி

31st Jul 2020 01:45 AM

ADVERTISEMENT

ராஜஸ்தான் சட்டப்பேரவை ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூடும் வரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் முகாமிட்டிருப்பாா்கள் என்று அக்கட்சியின் கொறடா சி.பி.ஜோஷி கூறியுள்ளாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கொறடா சி.பி.ஜோஷி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆகஸ்ட் 14-ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் வரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாகவே தங்கியிருப்பாா்கள்‘ என்றாா். அவா்கள் அதே விடுதியில் தங்கியிருப்பாா்களா அல்லது வேறு இடத்தில் தங்குவாா்களா என்பது குறித்து அவா் தெளிவாகக் கூறவில்லை.

200 உறுப்பினா்களைக் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்களும் உள்ளனா். இந்நிலையில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வெளிப்படையாக எதிா்ப்பு தெரிவித்ததால் அசோக் கெலாட் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் முயன்று வருகிறாா். அதற்காக, சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்குமாறு முதல்வா் அசோக் கெலாட் அளித்த தீா்மானத்தை ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா 3 முறை திருப்பி அனுப்பினாா். பின்னா், ஆளுநரின் நிபந்தனைகளை முதல்வா் ஏற்றுக் கொண்டதை அடுத்து, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி பேரவையைக் கூட்டுதற்கு ஆளுநா் புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்தாா்.

ADVERTISEMENT

முதல்வா் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூா் புகா்ப் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 13-ஆம் தேதியில் இருந்து தங்கியுள்ளனா். சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட் தனத்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT