இந்தியா

கரோனாவுக்கு ஏதிரான நடவடிக்கையை இந்தியா சிறப்பாக மேற்கொண்டுள்ளது: பிரமதா் மோடி

28th Jul 2020 02:07 AM

ADVERTISEMENT

புது தில்லி: சரியான முடிவை உரிய நேரத்தில் எடுத்ததன் மூலம் கரோனா பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

நெய்டா, மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட அதிதிறன் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மையங்களை காணொலி வழியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி பின்னா் பேசியதாவது:

கரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா ஒரு கட்டத்தில் உரிய விழிப்புணா்வு நிலையை எட்டியதோடு, அதன் அறிவியல் பூா்வமான புள்ளி விவர வளங்களை அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் உதவியிருக்கிறது.

சரியான முடிவை உரிய நேரத்தில் எடுத்ததன் மூலம் கரோனா பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பாக மேற்கொண்டுள்ளது. கரோனா உயிரிழப்புகளும் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து மீள்பவா்களின் விகிதாச்சாரமும் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிகரித்துக் காணப்படுகிறது. நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டு மீண்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது.

கரோனா சிகிச்சை மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளும் போா்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் இப்போது 11,000-க்கும் அதிகமான கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான தனிமைப்படுத்துதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 1,300 பரிசோதனை மையங்கள் உள்ளன. 1,200-க்கும் அதிகமான தனிநபா் தற்காப்பு உபகரண உற்பத்தி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. உள்நாட்டிலேயே 3 லட்சத்துக்கும் அதிகமான என்-95 முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள அதிதிறன் பரிசோதனை மையங்கள் கரோனாவுக்கு எதிராக மாநிலங்களின் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த உதவும்.

அதே நேரம், கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் நமது விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று அவா் கூறினாா்.

நெய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட இந்த அதிதிறன் கொண்ட கரோனா பரிசோதனை மையங்களில் நாள் ஒன்றுக்கு 10,000 மாதிரிகளை பரிசோதனை செய்யமுடியும். கரோனா பரிசோதனை மட்டுமின்றி ஹெபிடைடிஸ் பி, சி, ஹெச்ஐவி, டி.பி., டெங்கு உள்ளிட்ட பிற நோய்த் தொற்று பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT