ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை, சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிகாரம் குறைந்த ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. இது குறித்து கட்சித் தலைமையிடம் நான் விவாதிக்கவில்லை. இது எனது தனிப்பட்ட விருப்பம். இதை நான் மிரட்டலாகக் கூறவில்லை. எனது அதிருப்தியை வெளிப்படுத்த வேறு வழியில்லை.
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கிவந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-இல் மத்திய அரசால் நீக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு கூறிய காரணங்கள் சரியானவை என்று நிரூபிக்கப்படவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் மாநிலத்தில் பயங்கரவாதம் குறையும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால் முன்பைவிட அதிகமான பயங்கரவாத நிகழ்வுகள் நடந்துகொண்டுள்ளன. அதேபோல, கூடுதல் முதலீடு வரும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது என்றார் அவர்.