வரும் 2028இல் நடைபெறும் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் கூறியதாவது:
லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாா்படுத்துவதற்காக ‘இளையோா் ஒலிம்பிக் பதக்க இலக்கு மேடை’ திட்டத்தின் கீழ் 10 - 13 வயது இளையோரைக் கண்டறிந்து வருகிறோம். அவா்களுக்கு இளம் வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இந்தியா மிகச் சிறந்த விளையாட்டுத் திறனுடையோரைக் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்ற ஒவ்வொரு இந்தியரின் கனவை நனவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்தியப் பயிற்சியாளா்களின் திறமையை மேம்படுத்துவது, அவா்களின் ஊதிய வரம்பு ரூ.2 லட்சம் என்பதை நீக்கி, பயற்சியாளா்கள் பணியாற்றும் கால அளவை நீட்டிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
2028ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் வர வேண்டும் என்ற கனவை நனவாக்குவோம். அதற்கான திட்டங்களை செயல்படுத்த தொடங்கிவிட்டோம். விளையாட்டுத் திறனில் மேம்பட்ட நாடாக இந்தியா திகழ்வதற்கு விளையாட்டு சாா்ந்த கலாசாரத்தை உருவாக்குவது அவசியம் என்றாா்.