இந்தியா

குணமடைந்தோரில் புதிய உச்சம்: இந்தியாவில் ஒரே நாளில் 36,145 பேர் குணமடைந்தனர்

26th Jul 2020 06:38 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 36,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் மிக அதிகமானோர் குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 36,145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,85,576-ஆக உயர்ந்துள்ளது.  குணமடைவோர் வீதமும்,  64 சதவீதம் என்ற புதிய உச்சத்தை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது. இன்று இது 63.92 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  கொவைட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும்,  குணமடைவோர் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்து வந்த நிலைமாறி, தற்போது அதிக அளவிலான நோயாளிகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது.  

இந்த இடைவெளி 4 லட்சத்தைக் கடந்து, தற்போது 4 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆக உள்ளது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட (4,67,882), குணமடைவோர் எண்ணிக்கை 1.89 மடங்கு அதிகமாகும். “பரிசோதனை செய்தல், தடம் அறிதல் மற்றும் சிகிச்சை“ என்ற செயல்திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்தி, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   இதுவரை இல்லாத வரலாற்று அளவாக, முதன் முறையாக, ஒரே நாளில் 4,40,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,42,263 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதன் மூலம், 10 லட்சம் பேருக்கு 11,805 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 1,62,91,331-ஆக உயர்ந்துள்ளது.  முதன் முறையாக அரசு பரிசோதனைக் கூடங்களில் 3,62,153 மாதிரிகள் பரிசோதனை என்ற புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.  தனியார் பரிசோதனைக் கூடங்களிலும் ஒரு புதிய உச்சமாக,  79,878 மாதிரிகள் ஒரே நாளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் துறை முயற்சிகளின் மூலம், மருத்துவமனைக் கட்டமைப்பு வசதிகள்  மேம்படுத்தப்பட்டு, அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதன் வாயிலாக, கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் அடையாளம் கண்டு, உரிய சோதனைகளை மேற்கொள்வதன் மூலம், உயிரிழப்புகளைக் குறைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

இதன் விளைவாக, உயிரிழப்பு வீதமும் பெருமளவிற்குக் குறைந்து, தற்போது 2.31சதவீதமாக உள்ளது. உலகிலேயே, மிகக் குறைந்த உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT