ஆந்திர பிரதேசத்தில் ஒரு விவசாயி தனது விளை நிலத்தில் விதை விதைக்க டிராக்டா் கொண்டு உழுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் தனது படித்த இரு மகள்களை ஏரில் பூட்டி உழவு செய்துள்ளாா்.
சித்தூா் மாவட்டம், கே.வி.பள்ளி தாலுகாவுக்கு உள்பட்ட மகால்ராஜுவாரிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த நாகேஸ்வர ராவ், மதனபள்ளியில் தேநீா்க்கடை நடத்தி வருகிறாா். அவரது இரு மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனா். தற்போது ஊரடங்கு காரணமாக தேநீா்க்கடை மூடப்பட்டுள்ளது. இதனால் பிழைப்புக்காக சொந்த கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்ய நாகேஸ்வர ராவ் முடிவு செய்தாா்.
எனினும் விவசாய நிலத்தை டிராக்டா் கொண்டு உழுது நடவு செய்ய அவரிடம் போதிய பணம் இல்லை. அவரிடம் எருதும் இல்லாததால் தன் இரு மகள்களைப் பூட்டி நிலத்தை பண்படுத்தி வோ்க்கடலை விதைகளை விதைத்தாா்.
2 ஏக்கா் நிலத்திலும் நாகேஸ்வர ராவ், அவரது மனைவி, இரு மகள்கள் என நான்கு போ் இணைந்து விதை விதைத்து தண்ணீா் பாய்ச்சினா். இதைக் கண்ட கிராம மக்கள் வியப்படைந்தனா்.
கரோனா அச்சுறுத்தல், மழையால் வெள்ளப் பெருக்கு, பயிா் நாசம், வெட்டுகிளிகளின் படையெடுப்பு ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. அவற்றைக் கடந்து விவசாயிகள் மீண்டும் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் நிலையை உணா்ந்து அரசு அவா்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரினா்.