இந்தியா

உத்தரப்பிரதேசம்: தொழிலதிபரின் பேரன் மீட்கப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

25th Jul 2020 04:07 PM

ADVERTISEMENT

 

கோண்டா: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் தொழிலதிபரின் 6 வயது பேரனைக் கடத்திச் சென்ற கும்பலிடம் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிறுவனை கடத்திச் சென்ற நால்வர் கும்பலை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

முன்னதாக, தொழிலதிபர் ராஜேஷ் குமார் குப்தாவின் பேரனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் கடத்திச் சென்றது.

ADVERTISEMENT

அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த சிலர், கர்னால்கஞ்ச் பகுதிக்கு நேற்று வந்து பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.

அப்போது அங்கே நின்றிருந்த சிறுவனை, காருக்குள் இருந்த ஒரு நபர் கையில் கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி அழைத்துள்ளார். சிறுவன் காருக்கு அருகே நெருங்கிய போது, உள்ளே இருந்த நபர்கள் சிறுவனை இழுத்து காருக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

பிறகு, அந்த சிறுவனின் குடும்பத்தினரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட ஒரு பெண், ரூ.4 கோடி கொடுத்தால்தான் சிறுவனை விட முடியும் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தினர்.

தொடர் விசாரணையில் கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர், சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஒரு கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

Tags : encounter
ADVERTISEMENT
ADVERTISEMENT