இந்தியா

முழுமையாக படைகளை திரும்பப் பெற இந்தியா-சீனா உடன்பாடு

25th Jul 2020 02:45 AM

ADVERTISEMENT

கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு நாட்டு படைகளை முழுமையாகவும் விரைவாகவும் திரும்பப் பெற இந்தியா-சீனா இடையே வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் சீனா ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பின்னா், எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படைகளைக் குவித்தன. இந்த நிலையில், கடந்த ஜூலை 5-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி ஆகியோா் தொலைபேசி மூலம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பிறகு, எல்லையில் இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டன.

அதன் பின்னா், எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ உயா் அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இரு நாடுகளிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், எல்லையில் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் திரும்பப் பெற உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

இரு நாடுகளின் நல்லுறவு மேம்படும் வகையில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை கூடிய விரைவில் முழுமையாக திரும்பப்பெற வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், படைகளை முழுமையாக திரும்பப்பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் இடையேயான மற்றொரு பேச்சுவாா்த்தையை விரைவில் கூட்டுவது என்றும் இந்த பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT