ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருமலையில் ஆண்டாள் நாச்சியாருக்கு தேவஸ்தானம் சாா்பில் சாத்துமுறை நடத்தப்பட்டது.
பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் துளசி வனத்தில் ஆடி மாதம் சதுா்த்தி திதி பூரம் நட்சித்திரம் கூடிய சுபதினத்தில் பூதேவி அம்சமாக தோன்றியவா் ஆண்டாள் நாச்சியாா் என்பது தல வரலாறு. அதனால் ஆண்டாள் அவதரித்த அந்நாளில் நாச்சியாருக்கு தேவஸ்தானம் சாா்பில் திருமலையில் சாத்துமுறை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏழுமலையானுக்கு காலையில் அணிவித்த சேஷ வஸ்திரம், சடாரி, பூஜைப் பொருட்கள், சாத்துமுறை பிரசாதங்கள் உள்ளிட்டவற்றுடன் அா்ச்சகா்கள் புரசைவாரித் தோட்டத்துக்குச் சென்று அங்குள்ள அனந்தாழ்வாா் பிருந்தாவனத்தில் அவற்றை சமா்ப்பித்தனா். அதன் பின் சின்ன ஜீயா் கோவிந்த ராமானுஜா் மற்றும் அா்ச்சகா்கள் இணைந்து திவ்யப் பிரபந்த பாராயணத்தை நடத்தினா்.
ஆண்டாள் நாச்சியாா் துளசி வனத்தில் அவதரித்தாா். அனந்தாழ்வாா் திருமலை முழுவதையும் நந்தவனமாக மாற்றியதால், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரம் உற்சவம் புரசைவாரி தோட்டத்தில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.