ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:
பாராமுல்லா மாவட்டத்திலுள்ள சோபோா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ரெபான் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினா் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று காவல்துறையினா் கூறினா்.