இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட பத்திரிக்கை செய்தி:
"இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 5,15,385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,870 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2,83,407 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் சிகிச்சை பெற்று வருபவர்களைக் காட்டிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,31,978 ஆக உள்ளது.
நாடு முழுவதும் ஐசிஎம்ஆர் அனுமதியுடன் செயல்பட்டு வரும் 1,180 கரோனா பரிசோதனை ஆய்வகங்களில் இதுவரை 1,13,07,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2,82,511 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 841, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 339."