புது தில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பயனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய மையத்தினால் அமைக்கப்பட்ட தொலைபேசி வாயிலாக சிகிச்சை பெறும் திட்டம் மார்ச் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பல்வேறு உள்ளூர் மொழிகளிலும் சேவை வழங்கப்பட்டது.
மனநலன் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் இந்த தொலைபேசி சேவை மூலம் வழங்கப்பட்டது.
பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் தங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக பலருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டதாக மன நலன் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய மையத்தின் இயக்குநர் பி.என். கங்காதர் கூறினார்.
இதுவரை சுமார் 3 லட்சம் பேரிடம் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. அதில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு மன நலன் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அது இலவச அழைப்பாகவே உள்ளது. சிலர் அழைப்பை எடுத்ததும் துண்டித்துவிட்டனர். சிலர் தேவையற்ற சந்தேகங்களை எழுப்பினர் என்று விளக்கம் அளித்தார்.