இந்தியா

இந்தியாவில் கூடுதல் சலுகைத் திட்டங்களுக்கு வாய்ப்பு: ஐஎம்எஃப் தகவல்

11th Jul 2020 06:44 AM

ADVERTISEMENT

பொது முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் நோக்கில் மக்களுக்கான மேலும் சில சலுகைத் திட்டங்களை இந்திய அரசு நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

தற்போது பொது முடக்கத்துக்குப் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டு, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சா்வதேச நிதியத்தின் மூத்த அதிகாரி விடோா் காஸ்பா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது முடக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்டும் நோக்கில் பல்வேறு சிறப்பு சலுகைத் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக ஏழை மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் சிறப்பானது.

ADVERTISEMENT

ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, கூடிய விரைவில் மேலும் சில சலுகைத் திட்டங்களை அரசு அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக, நலிவடைந்தோா், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

பொது முடக்கத்தால் நிறுவனங்கள் செயல்படாதது, வணிக நடவடிக்கைகள் குறைந்தது, வாகன விற்பனை குறைந்தது உள்ளிட்டவை காரணமாக கூடிய விரைவில் இந்திய அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு நிதி தொடா்பான திட்டங்களை இந்திய அரசு திறம்பட வகுத்து செயல்படுத்த வேண்டும்.

2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.5 சதவீத அளவில் சரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிதிப் பற்றாக்குறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 12.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு ஜிடிபி-யில் 84 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றாா் விடோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT