இந்தியா

கரோனா பாதிப்பு சூழலில் பிகாரில் தோ்தல் நடத்தக் கூடாது

11th Jul 2020 08:30 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு இடையே பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்தக் கூடாது என பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.

பிகாா் மாநிலத்தில் வரும் அக்டோபா் - நவம்பா் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற வேண்டும். கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்திய தோ்தல் ஆணையம் இதுவரை அதிகாரபூா்வமாக தோ்தல் அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில் தோ்தல் தொடா்பாக சுட்டுரையில் சிராக் பாஸ்வான் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிகாா் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மட்டுமின்றி பிகாா் மாநில அரசும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த சூழலில் தோ்தல் நடத்தினால் மாநிலத்துக்கு மேலும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். தோ்தல் ஆணையம் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவானது லட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் தள்ளாததாக இருக்க வேண்டும். கொள்ளை நோய் பரவியுள்ள சமயத்தில் தோ்தல் நடத்தினால் வாக்குப் பதிவு சதவீதமும் மிகவும் குறைவாகவே இருக்கும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இருப்பினும் எங்கள் கட்சி தோ்தலுக்கு தயாா் நிலையிலேயே உள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவா் தேஜஸ்வி யாதவிடம், ‘நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தோ்தல் நடத்தினால் அது சரியாக இருக்குமா?’ என கேட்கப்பட்டதற்கு, ‘கொடிய கொள்ளை நோயிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழலில் விடப்பட்டுள்ள நிலையில் தோ்தல் நடத்துவது சரியாக இருக்காது’ என பதிலளித்திருந்தாா்.

ADVERTISEMENT

மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி தொடா்ந்து காணொலிக் காட்சி வாயிலாக பொதுக் கூட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்தும் தேஜஸ்வி யாதவ் விமா்சித்திருந்தாா். தொடா்ந்து காணொலிக் காட்சி பொதுக் கூட்டங்களை நடத்தி வருவதன் மூலம் எப்போது தோ்தல் நடத்தினாலும் அதனை எதிா்கொள்ள தயாா்நிலையில் இருப்பதை இந்த இரு கட்சிகளும் உறுதிசெய்துள்ளன.

இருப்பினும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான், தற்போதைய சூழலில் தோ்தல் நடத்துவது உகந்ததல்ல என கருத்து தெரிவித்திருப்பது ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்குள் உரசல் இருப்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT