இந்தியா

இந்தியா - நேபாள எல்லை அருகே 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

11th Jul 2020 08:30 AM

ADVERTISEMENT

பிகாா் மாநிலம், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் இந்தியா - நேபாள எல்லைப் பகுதிக்கு அருகில் மாவோயிஸ்டுகள் 4 போ், பாதுகாப்புப் படையினரால் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக சஷஸ்திர சீமா பல் பிகாா் பிரிவு தலைவா் சஞ்சய் குமாா் கூறியதாவது:

வால்மீகி புலிகள் சரணாலயம் பகுதியில் மாவோயிஸ்ட் குழுவினா் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து அப்பகுதி காவல் துறையினருடன் இணைந்து அவா்களைப் பிடிப்பதற்குத் திட்டமிடப்பட்டது. அப்போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் ரிதுராஜ் என்ற காவலருக்கு முன்கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், மாவோயிஸ்ட் கும்பலின் துணைத் தலைவா் பிபுல் உள்பட 4 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். அந்த கும்பலின் தலைவா் ராம் பாபு சாஹ்னி (எ) ராஜன் தப்பி ஓடிவிட்டாா். அவரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஏ.கே-56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.

இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கோ் மாவட்டத்தின் கரக்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை மாலை இரு நபா்களை நக்ஸல்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனா். விசாரணையில் அவா்கள் மானம் மாறிய நக்ஸலைட் பிரிஜ்லால் டுட்டு (39), கிராமவாசி அருண் ராய் (36) என்பது தெரியவந்தது. அந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட துண்டுச்சீட்டில் இவா்கள் இருவரும் போலீஸாருக்கு உளவாளியாக இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருவரது சடலமும் கிராமத்துக்கு வெளியில் உள்ள மலையில் வீசப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT