இதுவரை இல்லாத சாதனை அளவாக இந்த சந்தை ஆண்டு (2020- 21) கோதுமை கொள்முதலில் 38.48 மில்லியன் டன் கொள்முதல் செய்து அரசு சாதனை படைத்துள்ளது. இதில் ம.பி. மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
ஏப்ரல் முதல் அடுத்த மாா்ச் வரையிலான காலம் விவசாய விளைபொருள் கொள்முதலுக்கான சந்தை ஆண்டாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2012-13 சந்தை ஆண்டில் 38.18 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதே சாதனை அளவாக இருந்தது. 2019-20 சந்தை ஆண்டில் 34.17 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.
அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமையைக் கொள்முதல் செய்கிறது. இந்த சந்தை ஆண்டுக்கான கொள்முதல் ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாகவும், சில தினங்களில் மேலும் சில ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்படலாம் என்றும் எஃப்சிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கொள்முதலில் மத்திய தொகுப்புக்கு 12.93 மில்லியன் டன் கோதுமையை அளித்து மத்திய பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 12.71 மில்லியன் டன் கொள்முதலுடன் பஞ்சாப் மாநிலம் இரண்டாமிடம் வகிக்கிறது. ஹரியாணா (7.4 மி.டன்), உத்தரப் பிரதேசம் (3.55 மி.டன்), ராஜஸ்தான் (2.21 மி.டன்) ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.
ஜூலை 8 நிலவரப்படி இந்திய உணவுக் கழக கிட்டங்கிகளில் 81.25 மில்லியன் டன் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன. இதில் 54.52 மில்லியன் டன் கோதுமை , 26.72 மில்லியன் டன் அரிசி ஆகியவை அடங்கும். நடப்பு சந்தை ஆண்டில் 40.7 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகம் சென்ற அறுவடை ஆண்டில் (ஜூலை- ஜூன்) கோதுமை விளைச்சல் 107.18 மில்லியன் டன்னாக இருக்கும் என்று நிா்ணயித்திருந்தது. முந்தைய அறுவடை ஆண்டில் இதன் அளவு 103.6 மில்லியன் டன்னாக இருந்தது.