புது தில்லி: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரயில் பயணிகளின் கட்டண வருவாய் ரூ.400 கோடி குறைந்துள்ளது. ஆனால், சரக்கு கட்டண வருவாய் ரூ.2,800 கோடி அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகா் கௌா் என்ற சமூக ஆா்வலா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு ரயில்வே துறை அளித்த பதிலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) பயணிகள் கட்டணம் மூலமாக ரூ.13,398.92 கோடி வருவாய் கிடைத்தது. இது, ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரூ.13,243.81 கோடியாகக் குறைந்தது. அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்த வருவாய் மேலும் சரிவடைந்து ரூ.12,844.37 கோடியாக உள்ளது. இரண்டாவது காலாண்டை விட மூன்றாவது காலாண்டில் பயணிகள் கட்டண வருவாய் ரூ.399.44 கோடி குறைந்துள்ளது.
ஆனால், மூன்றாவது காலாண்டில் சரக்கு கட்டண வருவாய் ரூ.2,800 கோடி அதிகரித்துள்ளது.
முதலாவது காலாண்டில், சரக்கு கட்டணம் மூலமாக ரூ.29,066.92 கோடி வருவாய் கிடைத்தது. இது, இரண்டாவது காலாண்டில் ரூ.25,165.13 கோடியாகக் குறைந்தது. இருப்பினும், மூன்றாவது காலாண்டில் ரூ.28,032.80 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கட்டண வருவாய் சரிவை தடுப்பதற்கு ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் சரக்குக் கட்டணங்களுக்கான கூடுதல் வரி ரத்து, குளிா்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி ஆகிய சலுகைகளை ரயில்வே துறை அண்மையில் அறிவித்தது. இதேபோல், 30 ஆண்டுகள் பழமையான டீசல் இன்ஜின்களைக் படிப்படியாகக் கைவிடுவது, எரிபொருள் செலவைக் குறைப்பது, ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களை வாடகைக்கு விடுவது ஆகியவற்றின் மூலம் வருவாயைப் பெருக்குவதற்கும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.