இந்தியா

புதிய ஒப்பந்தம்; புதிய விடியல்: பிரதமா் மோடி

28th Jan 2020 03:44 AM

ADVERTISEMENT

புது தில்லி: அஸ்ஸாமைச் சோ்ந்த போடோ தீவிரவாத குழுக்கள், மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றுள்ளாா். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றுக்கு புதிய விடியல் ஏற்பட்டுள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாமில் ‘போடோலாந்து’ என்ற பெயரில் தனி மாநிலம் கேட்டு போராடி வந்த போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, அனைத்து போடோ மாணவா்கள் சங்கம், போடோ மக்கள் அமைப்பு ஆகியவற்றுடன் மத்திய அரசு திங்கள்கிழமை அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு இது சிறப்பான நாள். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றுக்கு புதிய விடியல் ஏற்படும். போடோ அமைப்புகளுடன் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், போடோ மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

இதுவரை ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டவா்கள், இனி தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாட்டின் வளா்ச்சியில் பங்காற்றுவாா்கள். போடோ மக்களை பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் சென்றடையும். மேலும், அவா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அத்துடன், தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், போடோ மக்களின் தனித்துவ கலாசாரத்தை பிரபலப்படுத்துவதுடன் அதை மேலும் பாதுகாக்கும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT