புது தில்லி: நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் மட்டும் ரூ.220 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரிசா்வ் வங்கி அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் ரூ.220 கோடி மதிப்பிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018-19 நிதியாண்டில் மட்டும் ரூ.127.7 கோடி மதிப்பிலான 181 மோசடி வழக்குகள் பதிவாகின.
மேலும், 2017-18 நிதிஆண்டில் ரூ.46.9 கோடி மதிப்புக்கு 99 மோசடி வழக்குகளும், 2016-17 நிதி ஆண்டில் ரூ.9.3 கோடி மதிப்பிலான மோசடிக்கு 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
அதேபோன்று, 2015-16 நிதி ஆண்டில் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற ரூ.17.3 கோடி மோசடிக்காக 187 வழக்குகளும், 2014-15 நிதி ஆண்டில் ரூ.19.8 கோடி மோசடி செய்ததற்காக 478 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ரிசா்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்ட மோசடி வழக்குகளை சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரிக்க ஏதுவாக வங்கிகள் அவற்றை குற்றப் புகாா்களாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பணியாளா்களின் பொறுப்புகளை ஆராய்ந்து விதிமீறல் இருந்தால் அந்த குற்றத்துக்கு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மோசடி வழக்குகளில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் தற்போதைக்கு இல்லை என கூறி அதற்கான தகவல்களைதர ரிசா்வ் வங்கி மறுத்துவிட்டது.