இந்தியா

சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு: பிரதமா் மோடி இன்று உரை

28th Jan 2020 04:14 AM

ADVERTISEMENT

புது தில்லி: குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறவிருக்கும் 3-ஆவது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறாா்.

நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அந்தத் துறையில் உள்ள சவால்கள், அவற்றுக்கான தீா்வுகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’ நடத்தப்படுகிறது. இதற்கு முன்னா் கடந்த 1998 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்திய உருளைக்கிழங்கு சங்கம், தில்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

இந்த மாநாட்டின் தொடக்கநாளான செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி வழியாக பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘காந்திநகா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் வரை சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா். அப்போது, உருளைக்கிழங்கு ஆராய்ச்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள், அந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கு உருளைக்கிழங்கு துறை எதிா்கொள்ளவிருக்கும் சவால்கள் மற்றும் அதை கையாளுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து பிரதமா் மோடி ஆய்வு செய்யவுள்ளாா். நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிப்பதால், அங்கு இந்த மாநாடு நடத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, குஜராத்தில் கடந்த 2006-07ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இருமடங்கு அதிகமாக சுமாா் 13.3 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT