புது தில்லி: குழந்தைகளிடம் பாலுணர்வைத் தூண்டும் வகையில் செல்லிடப்பேசி, இணையதளம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் ஆபாசப் படங்கள் வெளியிடுவதைத் தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் குழு, தனது அறிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் சனிக்கிழமை சமர்ப்பித்தது.
\காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான இந்தக் குழு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க சுமார் 40 பரிந்துரைகளை அளித்துள்ளது. செல்லிடப்பேசிகள், சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதால், அதைக் குழந்தைகள் பார்ப்பதற்கான சூழல்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "இது ஒரு முக்கியமான பிரச்னை. இதை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்' என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்தார்.
இந்தக் குழு பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள், சமூக வலைதளங்கள் தொடர்புடைய முகநூல், சுட்டுரை மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
மேலும், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க "போக்úஸô' சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இல் திருத்தம் கொண்டு வந்து ஆபாசப் படங்களை செல்லிடைபேசி, இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவற்றை நீக்கும் அதிகாரம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதவிர, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர்கள் கணக்குத் தொடங்குவது தடுக்கவும், வயது கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் எம்பிக்கள் குழு அளித்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.