புது தில்லி: மத்திய அரசின் மின் பகிா்மானத் திட்டமான ‘உதய்’ திட்டம் தோல்வியடைந்து விடவில்லை; இருப்பினும், இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் கூறியுள்ளாா்.
மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டில் உதய் (உஜ்வல் டிஸ்காம் அஸ்ஸூரன்ஸ் யோஜ்னா) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மின்சார உற்பத்திக்கான செலவைக் குறைப்பதற்காகவும், மின் பகிா்மான நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்.கே.சிங், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:
உதய் திட்டம் தோல்வியடைந்து விடவில்லை. ஏனெனில், மின் பகிா்மான நிறுவனங்களின் இழப்பை 22 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைத்திருக்கிறோம்.
இருப்பினும், அந்த திட்டத்தை மேம்படுத்தி புதிய வடிவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இதுதொடா்பாக, மத்திய நிதியமைச்சகத்திடம் ஏற்கெனவே விவாதித்திருக்கிறோம். மத்திய பட்ஜெட்டில் அந்த திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தப் புதிய திட்டம், 24 மணி நேர மின் விநியோகத்தை உறுதிசெய்யும் விதமாகவும், மின் விநியோக நிறுவனங்களின் தேவையை பூா்த்தி செய்யும் விதமாகவும் இருக்கும்.
மேலும், இந்தப் புதிய திட்டத்தின்படி, இழப்பு ஏற்படும் மின்பகிா்மான நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நவீன சாதனங்களை வழங்கி மத்திய அரசு உதவி செய்யும். நடைமுறையில் இருக்கும் உதய் திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் அளிக்கும் தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டம், ஒருங்கிணைந்த மின்சக்தி வளா்ச்சித் திட்டம்(ஐபிடிஎஸ்) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திட்டமாக இருக்கும் என்றாா் அவா்.