இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் சிறையில் எப்படி இருக்கிறார்கள்?

25th Jan 2020 02:32 PM

ADVERTISEMENT


பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடப்படவிருக்கும் நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும், மனதளவிலும், உடலளவிலும் சீராக வைத்துக் கொள்ள திகார் சிறை நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, கடைசியாக தங்களது குடும்பத்தினரை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் என்று நால்வரிடமும் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது. அதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரை திகார் சிறைக்கு வரவழைக்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர்.

நான்கு குற்றவாளிகளான முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்சய் குமார் சிங் (32) ஆகியோர் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர்.

இந்த நான்கு பேரையும் சிறை நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாக வினய் மற்றும் பவன் கடந்த மூன்று நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டனர். உடனடியாக மருத்துவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் அவ்வப்போது உணவை உண்ண மறுத்து வருகிறார்கள். அவர்கள் மனதளவில் நலமாக இருப்பதற்கும் சிறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

விதிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் தொலைக்காட்சிப் பார்ப்பதையும், செய்தித்தாள் படிப்பதையும் படிப்படியாகக் குறைத்துவிட்டோம். அவர்களைப் பற்றிய செய்திகளால் மனதளவில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனநல மருத்துவர்களும் அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி, வாரந்தோறும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்கிறார்கள்.

குற்றவாளிகள் நால்வரும் இதுவரை தங்களது கடைசி ஆசை பற்றியோ, குடும்பத்தினரை சந்திப்பது பற்றியோ வாய் திறக்கவில்லை. ஜனவரி 30ம் தேதி வரை அவர்களுக்கு நேரம் இருக்கிறது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கைதிகளைச் சந்திக்க முடியும். ஆனால், இவர்கள் நால்வரையும் சந்திக்க அதிகமான உறவினர்களைக் கூட சிறை நிர்வாகம் அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT