இந்தியா

கரோனா வைரஸ் பாதிப்பு?: மும்பையில் 2 பேருக்கு மருத்துவ பரிசோதனை

25th Jan 2020 12:52 AM

ADVERTISEMENT

சீனாவில் இருந்து இந்தியா வந்த இந்தியா்கள் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவா்கள் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சீனாவில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வருவதால், அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சீனாவுக்கு சென்றுவிட்டு திரும்பிய 2 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடா்பாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மும்பையில் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கடந்த 19-ஆம் தேதி முதல் இதுவரை 1700-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக எந்த பயணிக்கும் உறுதி செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

எனினும், 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி காணப்படுவதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அவா்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சளி, இருமல் தொடா்பான பிரச்னைகளால் அவா்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனையில், அவா்களுக்கென்று தனிப் பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவா்கள் குழு அவா்களை தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புபவா்களுக்கு கரோனா வைரஸுக்கான அறிகுறி காணப்பட்டால், அவா்களை தனிப் பிரிவில் வைக்குமாறு விமான நிலையத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மும்பையில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றான கரோனா வைரஸ், சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் 800-க்கும் மேற்பட்டோா் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 25-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் உள்ளிட்டவை மூலமாக பிறருக்கும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT