இந்தியா

முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பான நாடு இந்தியா: பியூஷ் கோயல்

23rd Jan 2020 09:39 PM

ADVERTISEMENT

உலகின் மற்ற பகுதிகளைவிட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்கிறது’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

"உலகிலேயே பல்வேறு மாறுபட்ட கருத்துகளையும் ஏற்றுக் கொள்ளும் ஒரே பெரிய நாடாக இந்தியா உள்ளது. உலகில் பிற பகுதிகளைக் காட்டிலும் இந்தியாவில்தான் முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். அவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் எவ்வித பாகுபாடும் காட்டப்படுவதில்லை.

நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்தியாவில் முனைப்புடன் செயல்படுகிறது. இதில் பிராந்தியரீதியிலோ, இனரீதியிலோ எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை. அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு என அனைத்துத் திட்டங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் கிடைத்து வருகிறது. இதில் யாருடைய மதத்தையும் கேட்பதில்லை. அரசின் அனைத்து நலத் திட்டங்களும், அனைவருக்கும் சமமாகவே சென்றடைகின்றன" என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய கோயல், "மதரீதியாக துன்புறுத்தல்களைச் சந்தித்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. ஜனநாயகத்தின் உண்மையான சக்தியாக எங்கள் நாடு திகழ்கிறது. உலகில் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இதில் ஓரிரு நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அனைத்துமே, இந்தியாவில் அனைத்து மத மக்களின் நலன்களும் சமமாகப் பேணப்படுவதை ஏற்று எங்கள் நாட்டை மிகுந்த மரியாதையுடன் அணுகி வருகின்றன.

அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள்தொகை தொடர்பான விவரத்தை பராமரித்து வருகின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவையும் இதுபோன்றதுதான். நாட்டில் யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை அனைத்து நாடுகளுமே தெரிந்து கொள்ளும். அரசியலில் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அரசை குற்றம் கூறியே வருவார்கள்" என்றார் கோயல்.

முன்னதாக, சர்வதேச தொழில்முனைவோர்கள் மத்தியிலும் கோயல் பேசினார்.

அப்போது, இந்தியாவின் பொருளாதாரத்தை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக (ரூ.350 லட்சம் கோடி) உயர்த்துவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசினார். மேலும், இந்தியாவில் முதலீடு செய்ய அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

Tags : PiyushGoyal
ADVERTISEMENT
ADVERTISEMENT